Home/என்கவுண்டர்/Article

பிப் 26, 2020 2234 0 Stella Benny
என்கவுண்டர்

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

எசேக்கியா மன்னன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் புரண்டான். அப்போது கடவுள் தமது இறைவாக்கினராகிய எசாயாவை அவனிடம் அனுப்பினார். எசாயா அவனிடம், “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப்போகிறீர். பிழைக்கமாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ‘ஆண்டவரே நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்’ என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பி அழுதார். ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டார்.

அரண்மனையை விட்டு எசாயா புறப்படுமுன்னே கடவுள் எசாயாவிடம் கூறியது: நீ என் மக்களின் அரசனாகிய எசேக்கியாவிடம் போய்ச் சொல்: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன். இந்த நகரைப் பாதுகாப்பேன்.

கடவுளின் தீர்மானத்தையே மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் ஒரு வேண்டுதலைத் தான் நாம் இந்த வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். எசேக்கியா மரணமடைய வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம். இருந்தும் அவனது கண்ணீரணிந்த வேண்டுதல்களால் மனமுருகிய கடவுள் தமது விருப்பத்தைக் கைவிடுகிறார். அவனது மன்றாட்டு முடியுமுன்னே அவனுக்குப் பதிலளிக்கிறார். “அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்” (எசா. 65:24) என்னும் இறைவாக்கு எசாயாவின் வாழ்க்கையில் நிறைவேறுகிறது. கூப்பிடும் குரலுக்கு ஓடோடி வந்து, நம் வேண்டுதல்களுக்குச் செவிசாய்க்கும் கடவுளை விவிலியம் முழுவதும் காண முடியும். இருந்தாலும் கடவுளை அழைத்து மன்றாட மனிதகுலம் தயக்கம் காட்டுகிறது. இதுவே கடவுளின் வருத்தங்களில் முதன்மையானது. “ஆனால் யாக்கோபே நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப்பற்றிச் சலிப்புற்றாயே!” (எசா. 43:22).

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

சூசன்னா கில்கியாவின் மகள். அவள் ஒரு பேரழகி. ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவள். அவள் தகப்பனார் பெயர் கில்கியா, கணவர் யவாக்கிம். இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் இரு முதியவர்களுக்கு சூசன்னாவின் மீது ஈர்ப்பு ஏற்ப்பட்டது. இவர்களோ இஸ்ரயேலின் நடுவர்களாய் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் சூசன்னாவைத் தனியான இடத்தில் சந்திக்கத்தக்க தருணம் பார்த்திருந்தனர். இவர்கள் இருவரும் சூசன்னாவின் மீது கொண்டிருந்த காமவெறியை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் அவளை அடைவதற்காகத் தாங்கள் கொண்டிருந்த காமவேட்கையை வெளியிட வெட்கப்பட்டார்கள். எனினும் அவளைக் காண ஒவ்வொரு நாளும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஒருநாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு தோட்டத்தினுள் நுழைந்து குளிக்க விரும்பினாள். அப்போது அந்த முதியவர்கள் தோட்டத்திற்குள் ஒளிந்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப்பெண்களிடம் ‘நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருட்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்’ என்று சொன்னாள். அவள் சொன்னவாறே அவர்கள் செய்தார்கள். தோட்டத்தின் வாயில்களை மூடிவிட்டு, அவள் கேட்டவற்றைக் கொண்டுவர ஓரக்கதவு வழியாக வெளியே சென்றார்கள். ஆனால் அங்கு ஒளிந்து கொண்டிருந்த முதியோரைக் காணவில்லை.

பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து அவளிடம் ஓடோடிச் சென்றனர். அவளை நோக்கி, ‘இதோ தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில் ஓர் இளைஞன் உன்னோடு இருந்தானென்றும் அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பி விட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்’ என்றார்கள்.

சூசன்னா பெருமூச்சு விட்டு, ‘நான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால் எனக்குக் கிடைப்பது சாவு. இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதைவிட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக் கொள்வதே மேல்’ என்றாள்.

பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினாள். உடனே முதியோர் இருவரும் அவளுக்கு எதிராகக் கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவன் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தான். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும் சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்றறிய வீட்டிலிருந்தோர் ஓரக்கதவு வழியே தோட்டத்திற்குள் ஓடி வந்தனர்.

முதியோர் தங்கள் கட்டுக்கதையைச் சொன்னபொழுது பணியாளர் பெரிதும் நாணம் கொண்டனர். அவர்கள் இதற்குமுன் இப்படிக் கேள்விப்பட்டதே இல்லை. மேலும் சூசன்னாவுக்கு எதிராகக் குற்றம் சாட்டியவர்கள் மக்களின் நடுவர்களாகையால் அவர்களின் பேச்சை யாரும் தீர விசாரிக்கவில்லை. எனவே சூசன்னாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சூசன்னா அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினாள். ஏனெனில் அவளது உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது (தானி(இ) 2:35).

சூசன்னா உரத்த குரலில் கதறி, ‘என்றுமுள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும் இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே’ என்று சொன்னாள்.

ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார். கொல்லப்படுமாறு அவள் நடத்திச் செல்லப்பட்ட பொழுது தானியேல் என்னும் பெயருடைய இளைஞனிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டிவிட்டார். தானியேல் உரத்தகுரலில், ‘இவளுடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை’ என்று கத்தினான். ‘இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும் உண்மையை அறிந்து கொள்ளாமலும் இஸ்ரயேல் பெண்மணி ஒருத்தியை தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்கள்’ என்றார். உடனே மக்கள் தானியேலை நீதி இருக்கையில் அமர்த்தினர். தானியேல் நீதிபதிகளின் இருக்கையில் அமர்ந்தார். மூப்பர்களாகிய அம்முதியவர்கள் இருவரையும் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தினார். அவர்கள் பொய்க்குற்றம் சாட்டியிருப்பதை எண்பித்தார். உடனே மக்கள்கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. பின்னர் மோசேயின் சட்டப்படி அவர்கள் இருவரையும் கொலைக்களத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். சூசன்னாவை அவரது கணவர் யவாக்கிமுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அவள் மக்கள் மத்தியில் பெரிதும் மதிப்புக்கு உரியவளாக மாறினாள்.

கடவுளிடம் சரணடைந்தால்

சூசன்னாவின் வழக்கு இங்ஙனம் முடிந்துபோனதன் பின்னணியில் இரண்டு காரியங்களை நாம் தெற்றெனப் புரிந்து கொள்ளலாம். ஒன்று சூசன்னாவின் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை. இன்னொன்று அவளுடைய கண்ணீர் சிந்திய பிரார்த்தனை. அவள் மனிதர்களை அல்ல, கடவுளையே நம்பினாள். “ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர். அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர். ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன். பள்ளத் தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன். பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்” (எசா. 41:17-18).

நமது வாழ்க்கையிலும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் அடிக்கடி ஏற்படலாம். ஆனால் கடவுள்மீது அடிபதறாத நம்பிக்கை வைப்போமானால் நாம் காப்பாற்றப்படுவது உறுதி. தூண் போன்ற இடுக்கண்களைத் துரும்பாய் மாற்றி உடைத்தெறிய அவர் ஒருவரே வல்லவர். “இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதியஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர், களைப்படையார். நடந்து செல்வர், சோர்வடையார்” (எசா. 40:30-31).

எசேக்கியா மன்னனுக்கும் சூசன்னாவுக்கும் கடவுள் உடனடியாகப் பதிலளிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு தலையீடு கடவுளிடமிருந்து நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுமாயின் நமக்கும் கடவுள்மீது நம்பிக்கை வரும். ஆனால் நம்முடைய வேண்டுதல்களுக்குக் காலந்தாழ்த்தப்பட்டால் என்ன செய்வது? அப்படிப்பட்டவர்களிடம் ஆண்டவர் கேட்கிறார்: “அருகில் இருக்கும்போது மட்டுமா? தூரத்தில் இருக்கும்போதும் நான் அல்லவா உன் கடவுள்? ஆண்டவரின் தலையீடு விரைவாகவோ மெதுவாகவோ உண்டாகட்டும். அவர் கருணையின் கடவுளாகையால் அவர் மறுமொழி அருளும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்றே இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

நேர்மையற்ற நடுவனின் நீதி

மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டுமென்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சுவதோ மனிதர்களை மதிப்பதோ இல்லை. அந்நகரில் கைம்பெண் ஒருத்தியும் இருந்தாள். அவள் நடுவரிடம் போய் ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என ஓயாமல் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அந்நடுவன் நெடுங்காலமாய் எதையும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவன் ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவளுக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவள் என் உயிரை வாங்கிக்கொண்டே இருப்பாள். இவ்வுவமையைச் சொல்லிமுடித்த இயேசு மக்களிடம் கூறியதாவது: நேர்மையற்ற நடுவனே இப்படிச் சொன்னான் என்றால் தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார். “இதுவரை நீங்கள் என்பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்” (யோவா. 16:24).

நாம் கேட்பது எப்படி?

நாம் இயேசுவின் பெயரால்தான் கேட்க வேண்டும். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக்கேட்டாலும் செய்வேன்” (யோவா. 14:13-14).

நம்பிக்கையோடு வேண்டுங்கள்

நாம் சிலநேரங்களில் ஜெபம் என்ற பெயரில் அதிகமாகப் பிதற்றிக்கொள்வது உண்டு. ஆனால் அதற்கேற்ற நம்பிக்கை நம்மிடம் இருப்பதில்லை. ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்” (மாற். 11:24). “கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்” (எபி. 11:6). இன்னும் நமக்குப் பதில் கிடைக்கவில்லையென்றால் அதற்கான காரணத்தையும் இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகிறது: “ஆனால் நம்பிக்கையோடு ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் எதாவது பெறமுடியும் என நினைக்காதிருக்கட்டும்” (யாக். 1:6-8).

இயேசுவின் முன்மாதிரி

இயேசுவின் சமர்ப்பண வாழ்க்கை வெற்றிபெறக் காரணமே நிரந்தரமான பிரார்த்தனைதான். இடையறாத இறைவேண்டல்களால் அவர் அன்றாட நிகழ்வுகளின்மட்டில் கடவுளின் திருவுளத்தை உய்த்தறிந்தார். பாவத்தில் விழவிடாதீர் என அவர் நாள்தோறும் ஜெபித்தார். “அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்” (எபி. 5:7). கடவுளாய் இருந்த பின்னும் இயேசு இத்துணையாய்க் கண்ணீர் சிந்திக் கடவுளை வேண்டிக்கொண்டாராயின் வெறும் புழுப்பூச்சிகளாகிய நாம் எவ்வளவோ அதிகமாய் கூக்குரலிட்டு ஜெபிக்க வேண்டியுள்ளது!

நீதிமானின் மன்றாட்டு

கடவுள் நீதிமானின் மன்றாட்டுகளுக்கே அதிகமாகச் செவிசாய்க்கிறார். “ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமை செய்வோருக்கு எதிராக இருக்கின்றது” (1பேது. 3:12). இப்போது புரிகிறதா? நம்முடைய ஜெபங்களுக்கு ஏன் உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை என்று.

அருள்கூர்ந்து மேலுயர்த்தும் கடவுள்

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் தமது உடலில் இருந்து சதா நேரமும் தம்மை வருத்திக் கொண்டிருக்கிற ஒரு முள்ளைப்பற்றிக் கூறுகிறார். எண்ணமற்ற சித்திகளால் நான் செருக்குறாவண்ணம் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ‘அலகையின் தூதன்’ என்றே பவுல் இதனைக் குறிப்பிடுகிறார். இந்த முள்ளை எடுத்து விடும்படி பவுல் மும்முறை கடவுளிடம் முறையிடுகிறார். ஆனால் கடவுள் அவரிடம் ‘உனக்கு என் அருள் போதும்’ எனப் பதிலளித்து முள்ளை அகற்றாமல் விட்டு விடுகிறார். நம்முடைய கண்ணீர் தோய்ந்த பிரார்த்தனைகளுக்கு சிலநேரங்களில் இப்படிப்பட்ட இறைவனின் அருள்வரங்களும் பதிலாகக் கிடைக்கக்கூடும்.

நாம் கேட்டதோ உடல்நலமாக இருக்கலாம். ஆனால் உடல்நோயைத் தீர்க்காமல் அதை மேற்கொள்ளும் வலிமையைக் கடவுள் தரக்கூடும். “ஏனெனில் நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கங்காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர். எனவே நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் அருள்நிறைந்த இறைவனின் அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக” (எபி. 4:15-16). நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமற் போகாது.

Share:

Stella Benny

Stella Benny

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles