` அன்பு தேம்பி அழுதால் - Shalom Tidings

Home/என்கவுண்டர்/Article

என்கவுண்டர்

அன்பு தேம்பி அழுதால்

வளைகுடா நாட்டில் வேலை செய்துவந்த காலம். எங்களுடன் இருந்த நண்பர் ஒருவருக்கு வீட்டிலிருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தில் அவனது இளைய சகோதரனுக்குக் கல்லியாணம் என்ற தகவல் சொல்லப்பட்டிருந்தது. நண்பன் அக்கடிதத்தைப் படித்துக் கண்ணீர் விட்டழுதான். அவன் ஊருக்குச் சென்று ஆண்டுகள் ஆறாகின. இளைய சகோதரிகள் மூன்றுபேர். அம்மூன்று பேரையும் நன்றாகப் படிக்க வைத்தான். திருமணமும் செய்து கொடுத்தான். அதற்குள் நண்பனுக்கு அகவை முப்பத்தைந்து ஆகிவிட்டதை அவன் அறியாதிருந்தான். இப்போது இருபத்தைந்து வயதுடைய இளைய சகோதரன் காதலியைக் கைப்பிடிக்கிறான். அதற்கான கடிதமே அது.

அக்கடிதத்தை நானும் வாங்கி வாசித்துப் பார்த்தேன். அதில் திருமணத் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வருகிறாயா? என்ற விசாரிப்பும் இல்லை. ‘சீக்கிரம் பணத்தை அனுப்பி வைக்கவும்’ என்ற வற்புறுத்தல்தான் அதில் தூக்கலாகத் தெரிந்தது. நான் நண்பனின் முகத்தை நோக்கினேன். தம்பியின் திருமணத்திற்கு முன் அண்ணனின் கல்லியாணம் நடக்கவில்லையே என நினைத்து நண்பன் அழவில்லை. மாறாக, வீட்டுக்கு அனுப்ப தன்னிடம் எதுவும் இல்லையே என்ற கவலையால்தான் அழுதான். அதை அவன் வாயால் கூறக் கேட்டபொழுது அவனுடைய தன்னலமற்ற சகோதரபாசத்தை எண்ணி நான் விக்கித்துப் போனேன். நாங்கள் பலராகச் சேர்ந்து அவனுக்கான பணத்தைக் கொடுத்து உதவினோம்.

இறையன்பின் நேரடிக் காட்சிகள்

தொலைதூர மணற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் நண்பன் தன்னைப் பற்றியல்ல; தனது வீட்டாரின் நல்வாழ்வைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறான். மரத்தின்மேல் ஏறி அடர்ந்த இலைகளின் ஊடே உற்றுப் பார்க்கும் சக்கேயுவின் உள்ளத்தை இயேசு தூரத்தில் வைத்தே உய்த்துணர்ந்ததுபோல், வெகுதூரமாய்த் தன் ஊரிலிருக்கும் தனது பிரியமானவர்களின் உள்ளங்களில் அன்பு மழைபோல் பெய்திறங்கும் எனது நண்பனின் வாழ்வில் நான் இயேசுவை அல்லாமல் வேறு யாரைக் காண முடியும்? இறையன்பின் நேரடியான காட்சிகளை இத்துணை ஆழத்தில் வேறெங்கும் நான் காணவில்லை.

அவனுடைய அன்பின் ஆழத்தை அவனுடைய பெற்றோரோ உற்றாரோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அவன் ஒரு பணம் சம்பாதிக்கும் நபர் என்றல்லாமல் அதற்கப்புறமாய் ஒன்றுமில்லை. ஆனால் அவனது அன்பின் ஆழத்தை அறிந்த நாங்கள், அவனைக் கிறிஸ்துவின் கைகளும் கால்களும் இதயமும் உடைய ஒரு புனிதனாகக் கருதினோம்.

எனினும் மற்றாரும் அறியாமல் ஒருநாள் மாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி அவனைக் கடவுளிடம் கூட்டிச் சென்றது. அவனல்லவா உண்மையான கிறிஸ்தவன்? இயேசு தம் சொந்த ஊருக்கு யாருமறியாமல் கூட்டிச் சென்ற இயேசுவின் அன்பு மகன். இதுபோன்ற எத்தனையோ காட்சிகளை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கிறிஸ்துவின் அன்பைப் பலரும் நேரடியாகக் கண்டுணர்வதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அறிந்து தமது மார்போடு அணைக்கும் ஒரு இயேசு நமக்கு உண்டு.

கிறிஸ்துவினுடைய அன்பை அறிந்து அதில் ஆழங்கால் படுபவரே உண்மையான கிறிஸ்தவர். இவ்வுண்மையை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். அதனால்தான், ஒருவன் வானதூதரின் மொழிகளைக் கற்றறிந்து பேசினாலும், வானுலக இன்பங்களை அனுபவித்துக் களித்தாலும் அன்பு இல்லையேல் ஒன்றுமில்லை என விவிலியம் சுட்டிக் காட்டுகிறது. இயேசுவின் அன்பு எவ்வகையில் சிறந்தது என்றால், அது அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுகிறது; அனைத்தையும் ஒப்புக் கொடுக்கிறது. எதையும் திருப்பி எதிர்பார்ப்பதில்லை. அவ்வன்பு தூரத்தில் இருப்பவர்களைக்கூடக் கண்டுணர்ந்து நேசிக்கிறது.

ஒரு கிறிஸ்து சீடன் என உரிமை கொண்டாடும் என் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அன்பு என்னும் சொல்லுக்கு நான் கொள்ளும் அர்த்தம் எத்தகையது? என் அன்பு கிறிஸ்துவின் உளப்பாங்கைக் கொண்டுள்ளதா? அல்லது தன்னலம் என்ற முகபடம் சூடியதா?

கிறிஸ்துவோடு உருகிச் சேர வேண்டியதே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை. அது மறுமையை அடையும்போது அந்த தெய்வீக அன்பில் கலந்து மகிழ அக்கிறிஸ்து பாசத்தின் கதிர்களை இம்மை வாழ்வில் வெளிப்படுத்துவோம். தன்னலம் கருதாமலும் எதையும் எதிர்பாராமலும் நாமும் அன்பு செய்வோம். அண்மையில் இருப்போர்க்கும் சேண்மையில் உறைவோர்க்கும் நமது அன்பின் கதிர்களை அகலப்படுத்துவோம்.

Share:

James Wadeker

James Wadeker

Latest Articles