Home/பிரபலமாக்கலாம்/Article

மார்ச் 03, 2020 1947 0 Br Amal Erumbanth MST
பிரபலமாக்கலாம்

பரிசுபெற வேண்டாவோ?

எனது தாய் தந்தையரின் அனுமதியோடு நான் குருமடத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். சில மாதங்களுக்குள் குடல்வால் அழற்சி (அப்பென்றிசைட்டிஸ்) என்னும் அரக்கன் எனக்குள்ளே நுழைந்தான். மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அறுவை சிகிச்சைக்கு உள்ளானேன். சிகிச்சை முடிந்ததும் மூன்றுமாத ஓய்வு. நான் பெட்டி படுக்கையுடன் வீட்டுக்குக் கிளம்பினேன். அப்போது என் நெஞ்சம் விதும்பியது.

நல்லதொரு குருவானவர் ஆக வேண்டுமென்ற எண்ணம் தொடக்கப்பள்ளிக் காலத்திலேயே என் நெஞ்சுக்குள் வேர் விட்டிருந்தது. பள்ளி வாழ்க்கையின் ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் அந்த எண்ணம் இன்னும் ஆழத்தில் வேரோடியது. எப்படியாவது உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி குருமடத்திற்குள் ஐக்கியமாக வேண்டும் என்பதே என் தீராப் பேரவா.

கல்வாரி மலையில் எனக்காக உயிர்விட்ட இயேசுவின் உடலை நான் என் சிறுவிரல் தீண்டிக் கொண்டாட வேண்டுமென்ற வாஞ்சையில் உள்ளம் பூரித்துக் காத்திருந்தேன். பூவினின் தேனுண்ண வரும் வண்டினைப் போல் ரீங்கரித்துக் குதூகலித்தேன். ஏனெனில் குருவாக வேண்டுமென்ற என் எண்ணம் எனது நாடி நரம்புகளை ஊடுருவி மாமிச மச்சைகளில் சங்கமித்திருந்தது. இந்நிலையில் தான் நான் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றதும் வீட்டில் ஓய்வுகொள்ளச் சென்றதும். ஆயினும் மூன்று மாத ஓய்வுக்குப் பின் மறுபடியும் செமினாரியில் நுழைந்தேன்.

எதிர்பாராத வழிகள்

இதற்கிடையில் முதலாண்டு குருமாணவர்கள் நன்றாகப் படித்து முன்னணியில் இருந்தனர். என்னுடைய நண்பர்களோவெனில் இயேசுவும் மாதாவும் மட்டுமே. சில நாட்களுக்குள் என்னை முற்றிலும் துவம்சம் செய்த தீங்கொன்று எனக்கு ஏற்பட்டது.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து குருமடத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் பயணம் செய்த ரயில் விபத்துக்குள்ளானது. என் பின்னந்தலையில் அடிபட்டு ஆழமான ஒரு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தொடர்ந்து படிப்பதில் இடையூறு ஏற்பட்டது. நான் மீண்டும் ஓய்வெடுப்பதற்காக வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அந்நாட்களில் நான் என்னையே சபித்தேன். என் இறையழைத்தலின் மீது சந்தேகம் கொண்டேன். மீண்டும் குருமடத்திற்குத் திரும்பிச் செல்வேன் என்ற எண்ணம் என்னைவிட்டு வெகு தூரமாய் இருந்தது.

சில மாதங்களில் என் காயம் ஆறியது. மறுபடியும் குருமடத்திற்குச் சென்றேன். ஆனால் அங்கே என்னைக் காத்திருந்தது படியேற்றம் அல்ல; படியிறக்கம்தான். நான் மீண்டும் ஒன்றாம் வருட மாணவர்களுடன் சேர்க்கப்பட்டேன். அப்போதெல்லாம் என் உள்ளம் மெதுவாக மந்திரித்தது: ‘உன்னை அழைத்தவர் நம்பிக்கைக்கு உரியவர்’ ஆகவே, அஞ்சாதே. “நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமான அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்” (1பேது. 1:23). இந்த இறைவசனம் இப்போதும் எனக்குள்ளே முழங்கக் கேட்கிறேன்.

புதிரான அழைத்தல்கள்

விவிலியம் முழுவதும் புதிர் நிறைந்த விசித்திரமான இறையழைத்தல்களை நாம் பார்க்கிறோம். ஆபிரகாமுக்குக் கடவுளின் அழைப்பு உண்டானபோது ‘ஆண்டவர் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்’ (தொ. நூ. 12:4). கடவுளின் அழைப்புக்குச் சீக்கிரமாகப் பதிலளிக்க அவரால் முடிந்தது. இவ்வாறே கடவுள் மோசேவையும் அழைக்கிறார். ஆனால் அவரால் சீக்கிரமான ஒரு பதிலைக் கொடுக்க முடியவில்லை. “ஐயோ ஆண்டவரே நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான். ஏனெனில் எனக்கு வாய் திக்கும். நாவும் குழறும்” (வி.ப. 4:10). ஆனால் கடவுள் அவரது தடையை நீக்குகிறார். “ஆகவே இப்போதே போ. நானே உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” (வி.ப. 4:12).

சாமுவேலைக் கடவுள் அழைத்தார். மும்முறை அழைத்தபோதும் அச்சிறுவனால் கடவுளின் அழைப்பை இனங்காண முடியவில்லை. ஆயினும் ஏலி என்ற குருவின் உதவியால் நாலாவது முறை கடவுள் அழைத்தபோது சாமுவேல் கடவுளின் குரலைக் கேட்டான். “அப்போது ஆண்டவர் வந்து நின்று, ‘சாமுவேல், சாமுவேல்’ என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல் ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று மறுமொழி கூறினான்” (1சாமு. 3:10).

புதிய ஏற்பாட்டில் கடவுள் கன்னிகையாகிய மரியாவை அழைக்கிறார். அப்போது மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக். 1:38). இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவரிடம் ‘என்னைப் பின்பற்றி வா’ என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார் (மத். 9:9).

இவ்வாறு கடவுள் பலரையும் பல சூழல்களில் அழைக்கிறார். கடவுளின் அழைப்புக்குச் சிலர் விரைவாக மறுமொழி நல்கினர். சிலரோ காலம் தாழ்த்தினர். காலம் தாழ்த்தியவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. விரைவாகப் பதிலளித்தவர்களே வேதாகம நூல்களில் இடம் பெற்றனர்.

பல்வேறு வழிகள்

நான்கு வகையான வாழ்க்கை முறைகளுக்குக் கடவுள் மனிதர்களை அழைக்கிறார். ஒன்று, குடும்ப வாழ்க்கை. இரண்டு, துறவு வாழ்க்கை. மூன்று, பிரம்மசரியம். நான்கு, குருத்துவம். எந்த வாழ்க்கை முறைக்கான அழைப்பாக இருந்தாலும் பிரமாணிக்கம் தவறாமல் இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் குருத்துவ வாழ்க்கைக்கான அழைப்பையே பெற்றுள்ளனர்.

புனித பிரான்சீஸ் அசீசி கூறுகிறார்: நான் ஒரு தேவதூதனையும் குருவானவரையும் ஒருசேரக் கண்டால் முதலில் வணக்கம் சொல்வது குருவானவருக்கே. புனித ஜாண் மரிய வியானியின் கூற்று இப்படி: எப்போது நான் குருவானவரைக் காண்கிறேனோ அப்போதெல்லாம் நான் இயேசுவைக் குறித்துச் சிந்திக்கிறேன். புனிதர்கள் பலரும் இயேசுவின் மீது கொண்ட அன்பினால்தான் இறையழைப்பை மனமுவந்து ஏற்றனர்.

கிறிஸ்தவப் பெற்றோர்களே இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில்லை. கிறிஸ்துவின் வாயிலாகக் கடவுள் மேலிருந்து விடுக்கும் அழைப்பென்ற பரிசைப் பெறுவதில் பலரும் மெத்தனமே காட்டுகின்றனர் (பிலி. 3:14). இயேசுவின் அழைப்பை ஏற்று அவரது விருப்பத்தை இப்பூமியில் நாம் நிறைவேற்றுவோம்.

Share:

Br Amal Erumbanth MST

Br Amal Erumbanth MST

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles