Home/பிரபலமாக்கலாம்/Article

மார்ச் 03, 2020 2150 0 Shalom Tidings
பிரபலமாக்கலாம்

மகிமைக்குள் இளைப்பாற்றும் ஆண்டவர்

நான் சின்னவனாய் இருந்த காலத்தில் பள்ளி விட்டதும் நேராக வயலுக்கு ஓடுவேன். அங்கே என் அப்பா வேலை செய்துகொண்டிருப்பார். அவருக்குக் கூடமாட உதவியபின் அந்திப் பொழுதில் அப்பாவுடன் வீட்டுக்குத் திரும்புவேன். சோர்ந்து போன கால்களுடன் அப்பாவுக்குப் பின்னே ஒற்றையடிப் பாதைகளில் நடப்பேன். அவ்வப்போது என் அப்பன் திரும்பிப் பார்த்து, ‘மகனே வீட்டை நெருங்கி விட்டோம்’ என்பார்.

இப்போது வயதாகி விட்டது. யாத்திரையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். என் விண்ணகத்தந்தை நடுங்கும் என் கைகளைப் பற்றிச் சொல்கிறார்: “மகனே நீ நித்திய வாழ்வை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்”. ஆம். இது வானகத்தந்தையின் மதுரமான குரல்!

இறைவாக்கினராகிய தாவீது மன்னன் கடவுளை நோக்கி, “உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர். முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்” (தி.பா. 73:24) என நயந்து பாடுகிறார். தமது விலைதீராத குருதியால் நம்மை மீட்ட ஆண்டவர், தூய ஆவியால் நம்மை வழிநடத்தி மகிமைக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். “தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்” (தி.பா. 37:23-24).

தந்தையின் வீட்டில் காத்திருக்கும் ஆண்டவர்

கிறிஸ்தவர்களாகிய பலர் மரணத்தை நெருங்கும்போது முகவாட்டமாய்த்தான் காணப்படுகின்றனர். ஏனெனில் இனி வரப்போகும் விண்ணக மாட்சியைக் குறித்து ஆனந்த பரவசம் அடைய அவர்களால் முடிவதில்லை. மாறாக, இந்தப் பூமியில் இன்னும் சிறிது காலத்தில் கைவிட்டுப் போகக்கூடிய உறவுகள் மற்றும் செல்வ சுகங்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். பூமியில் உள்ள செல்வங்களை இழப்பதென்பது அவர்களால் முடியாத காரியம். ஆனால் எனக்கு ஒரு கிறிஸ்தவனைத் தெரியும். அவன் சற்று வித்தியாசமானவன். அவனை ஒரு கொடூர நோய் தாக்கியுள்ளதாகவும் அது இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாகவும் மருத்துவர் கூறியபோது சற்றும் பதறவில்லை. மாறாக, மருத்துவருக்கு மனந்திறந்து நன்றி கூறினான். அவன் சொன்னது: “என் வானகத்தந்தை தமது வான்வீட்டில் எப்போது என்னை அழைப்பாரோ என்ற எண்ணத்தால் என் உள்ளம் முறுவலிக்கிறது. உற்றார் உறவினரை இழக்க நேரிடும் வலியைவிட வானகவீட்டின் ஆனந்த மாளிகையே எனக்கு இன்பமாய் இருக்கிறது”.

இருண்ட சிறைக்குள்ளே மரணதண்டனையின் நாளை எதிர்நோக்கி அரண்ட உள்ளத்துடன் இருக்கும் பவுல், நிலை வாழ்வின் பேரானந்தப் பெருநிலையை எண்ணி இறும்பூது அடைகிறார். எந்த நேரத்திலும் மரணம் நிச்சயம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி பொலத் தெரிந்து வைத்திருக்கும் அவர் அதைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாறாக வானகப் பேரின்பத்தின் பெறற்கரிய பேறுகளை எண்ணி பரவச நிலையை அடைகிறார். “நாங்கள் காண்பவற்றை அல்ல; நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” (2கொரி. 4:18) எனத் துணிந்து சொல்கிறார் புனித பவுல். தந்தை, மகன், தூய ஆவியாகிய மூவோரிறைவனின் மீது நாம் வைத்திருக்கும் அளப்பரிய அன்பு நமக்கு சாந்தியையும் சமாதானத்தையும் அருளவில்லையா?

இதய வாசலைத் தட்டும் ஆண்டவர்

புனித யோவானுக்கு அருளப்பட்ட திருவெளிப்பாட்டில் ஆண்டவர் அளிக்கும் வாக்குறுதியைக் கவனியுங்கள்: “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன்” (தி.வெ. 3:20). ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நட்பின் அடையாளம். இயேசு நம்மைத் தம் நண்பர்களாய் மாற்றியுள்ளார். அந்நட்பின் அடையாளமாக நம்மோடு அமர்ந்து உணவருந்த விரும்புகிறார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து வந்தவர்தான் பிரசித்தி பெற்ற போதகர் வாள்ட்டர் இன்சண். அவர் பிறந்த இங்கிலாந்து தேசத்தின் ஒரு சிற்றூரில் தமக்கு அறிமுகமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அவர் பெயர் கிரானிபுட். குணவதியும் சீமாட்டியுமான அவரை ஒருநாள் இன்சண் தற்செயலாகச் சந்தித்தார். செல்வது எங்கே என வினவிய போது, வயது முதிர்ந்த ஓர் ஏழை மூதாட்டியைக் காணச் செல்கிறேன் என்றார். அவருடன் அமர்ந்து தேநீர் அருந்த விரும்புவதாகவும் கூறினார். இன்சண் போதகருக்கு அம்மூதாட்டியை நன்றாகத் தெரியுமாகையால், தமது பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்துக் கூறினார்: “அம்மூதாட்டியிடம் தேயிலை இருக்க வாய்ப்பில்லை; தேநீருக்கான தேயிலை இதில் இருக்கிறது!”

கிரானிபுட்டின் செயல் நம்மை உயரிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. நம் இதய வாசலைத் தட்டும் ஆண்டவருக்கு நாம் நம் நெஞ்சக வாசலைத் திறப்போமானால் நமக்குத் தேவையானவற்றை அவரே கொண்டு வருவார். அவைதான் ஆதிக்காலம் தொட்டே நமக்காக அவர் பேணி வைத்திருக்கும் நலன்கள்! நன்மைகள்!! அவர் உயிர் தரும் உணவு. மீட்பின் திருவார்த்தை, வழியும் வாழ்வும் உண்மையும். அவருடன் அடியற்றி நடப்போமானால் வானக வீட்டில் அவரோடு விருந்துண்போம்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles