Home/பிரபலமாக்கலாம்/Article

மார்ச் 04, 2020 2301 0 Shalom Tidings
பிரபலமாக்கலாம்

இயேசு பாடையைத் தொட்டார்

அரண்களும் அழகும் வாய்ந்த செழிப்பான சிற்றூர்தான் நயீன் என்னும் ஊர். இயேசு அவ்வூரை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரோடு திரளான மக்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இயேசு தம் சீடர்களோடும் புதிதாகத் தம்மோடு சேர்ந்தவர்களோடும் பேசிக்கொண்டும் உலாவிக் கொண்டும் வழிநடந்தார்.

அவர்கள் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபொழுது இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். அவர்கள் தங்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பாடையில் கிடப்பவன் ஓர் இளைஞன். மணமலர்களும் வெள்ளாடைகளும் படுநேர்த்தியாக உள்ளனவே என்றான் யூதாஇஸ்காரியோத்து.

சுவரின் மறுபக்கமாகச் சவ ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. பிணத்தின் அருகே ஒரு பெண்மணி விரிதலையோடு அழுத கோலத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகத்திரை தரித்திருந்தாள். பிணத்தைப் பிடித்திருந்தவர்களுள் ஒருவனின் கால் கல்லில் இடறியதால் பாடையில் கிடந்த பிணம் லேசாக அசைந்தது. அப்போது அத்தாய் அவனிடம் அழுதரற்றிக் கூறினாள்: “கூடாது கூடாது; கவனமாகப் போங்கள். என் மகன் அந்த அளவுக்குத் துன்பப்பட்டவன்”. அவள் தனது நடுங்கும் கையை உயர்த்தி பாடையின் மீது கிடந்த மகனை வருடினாள். பாடையின் பக்கத்தில் தொங்கிக் கிடந்த துகிலின் குஞ்சலத்தை முத்தமிட்டாள். மனமிரங்கிய பேதுருவின் கண்கள் குளமாகின. அவர் மெதுவாக ‘அவள் தான் அம்மா’ என மந்திரித்தார். பேதுருவின் கண்கள் மட்டுமல்ல; அந்திரேயு, யோவான் ஆகியோரது கண்களிலும் நீர் நிரம்பின. எப்போதும் அசராது நிற்கும் தோமாவின் கண்கள் கூடப் பனித்தன. அவர்களின் நெஞ்சம் தவித்தது. யூதாஸ் தனக்குத் தானே சொன்னான்: இறந்தவன் நானாக இருந்திருந்தால் என் தாய் எத்துணை வருந்தியிருப்பாள்!

கருணைக் கடலாகிய இயேசு பாடையின் அருகிலே சென்றார். பிண ஊர்வலம் மயானத்தை நெருங்கியபோது அத்தாயின் ஓலம் விண்ணைப் பிளந்தது. இயேசு பாடையைத் தொட முயன்றார். உடனே இயேசுவின் கைகளை விலக்கிவிட்டு அந்த அம்மா சொன்னாள்: அவன் எனக்குரியவன்! “அம்மா அவன் உங்க பிள்ளைதான், தெரியும்”. ‘அவன் என் பிள்ளை! அவன் எனக்கு நல்லவன். இருந்தும் ஏன் அவன் இறந்தான்? நான் ஒரு கைம்பெண்’. அருகிருந்தவர்களின் ஒப்பாரி கதறலொலியாய்க் காற்றில் கலந்தது. அத்தாய் புலம்பிப் புலம்பி அழுதாள். அழுகையின் தீவிரத்தால் அவள் மூர்ச்சையுற்றாள்.

“அம்மா, அழாதீர்”. இயேசு தம் இடக்கையால் அவளை இறுகப் பிடித்தார். வலக்கையால் பாடையைத் தொட்ட இயேசு, அதைச் சுமந்து வருவோரிடம், பாடையைக் கீழே இறக்கி வையுங்கள் என்றார். அவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தனர். இயேசு, பாடையை மூடியிருந்த கட்டுகளை இழுத்தார். துணிகளை அகற்றினார். மூடாத மேனியுடன் பிணத்தைப் பார்த்த தாய், அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்; அரற்றினாள். இயேசு இப்போதும் அவளுடைய கையை இறுகப் பிடித்துள்ளார். அவரது கண்கள் தீட்சண்யமுள்ளனவும் ஒளிமின்னுவனவுமாய் உள்ளன. வலக்கையைத் தாழ்த்திய இயேசு சர்வ வல்லமையுடன் உரக்கக் கூறினார்: “இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”.

இறந்தவன் அசைந்தான். அவன் கட்டுகளை அறுத்து எழுந்தான். அச்சம் மேலிடக் கதறினான்: அம்மா….

“தாயே இதோ உம் மகன். கடவுளின் பெயரால் இவனை நான் உனக்கு அளிக்கிறேன். அவன் வெளியே வர உதவி செய்யுங்கள்..!”

இயேசு திரும்பி நடக்க விரும்பினார். ஆனால் மக்கள் கூட்டம் அவரை விடவில்லை. கட்டுகளை அறுத்து நீக்கி அவன் தன் அம்மாவைத் தழுவினான். அவள் தனது மேலாடையால் அவனைப் போர்த்தினாள். அவனை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்.

அவரது கண்ணீரைக் கண்ட யூதாஸ், “போதகரே நீர் அழுவானேன்?” என வினவினார்.

இயேசு அவனிடம், “நான் என் அம்மாவை நினைத்துப் பார்த்தேன்” என்றார். இவ்வுரையாடல் அத்தாயின் உள்ளத்தை உசுப்பியது. அவள் தன் மகனுடன் மண்டியிட்டு, “என் மகனே இதோ இங்கு நிற்கும் இத்தூயவரை நீ புகழ்ந்து பாடு; உன் தாய்க்கு மீண்டும் உயிர் தந்தவர் இவரே” என்றாள். அவள் குனிந்து இயேசுவின் ஆடையினுடைய விளிம்பை முத்தமிட்டாள். மக்கள் இயேசுவுக்கும் கடவுளுக்கும் ஓசானா பாடினர்.

(இறை மனித அன்புக்கீதை: திருத்திய பதிப்பு).

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles