Home/பிரபலமாக்கலாம்/Article

மார்ச் 04, 2020 2117 0 Leela Philip
பிரபலமாக்கலாம்

அவர் என்னையும் அழைப்பாரா?

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்(லூக். 19:5). இது ஒரு தற்செயலான நிகழ்ச்சியென்று நினைக்கிறீர்களா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. சும்மா மரத்தில் ஏறி உட்கார்ந்திருந்த ஒருவனை இயேசுவும் சும்மா கூப்பிட்டார் என நினைக்காதீர்கள். லூக்கா நற்செய்தி 19 ஆம் அதிகாரம் 3 முதல் 9 வரையிலான பகுதியை வெகு பக்திசிரத்தையுடன் வாசித்தால்தான் உண்மை புலனாகும்.

இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார். வரிதண்டுவோனாகிய மத்தேயுவை ஆண்டவர் அழைத்து அவரோடு கொண்டு நடப்பதை சக்கேயு அறிந்தார். அவரைப்போல் நானும் ஆக வேண்டும். இயேசுவைக் கண்ணாரக் காண வேண்டும் என உள்ளுக்குள் விரும்பினார் சக்கேயு. சக்கேயு குட்டையாய் இருந்ததால் இயேசுவைப் பார்க்க முடியவில்லை. அவர் முன்னே ஓடிப்போய் அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். வரிதண்டும் ஒரு தொழிலைச் செய்யக்கூடிய நபர் சும்மா போய் மரத்தில் ஏறி ஒளிந்திருப்பாரா? அவர் தமது போர்வையைக் கழற்றியாக வேண்டும். அதாவது தமது படாடோபங்களைத் துறக்க வேண்டும். அவர் உரோமைப் பேரரசின் உயரதிகாரி. இந்தப் பதவியையே அவர் துச்சமாய் மதித்துத் தூக்கியெறிய வேண்டும்! அதற்கப்புறம் தான் மரத்தில் ஏற முடியும்.

மனமறியும் ஆண்டவர்

ஆண்டவர் நம் உள்ளங்களை அறிகிறார். அப்படித்தான் அவர் தம் சீடர்களை அழைத்தார். மாறாக, ஏதோ சில சீடர்கள் வேண்டுமே என நினைத்து கடற்கரையில் வலை கழுவிக்கொண்டிருந்தவர்களையும் அவர் ‘வாங்க, வாங்க’ என்று அழைக்கவில்லை. அவர்கள் யோவானைக் கவனித்தவர்களும் இயேசுவைக் காத்திருந்தவர்களும் ஆவர்.

இரவு நேரங்களில் கடலலைகளைக் கண்ணோக்கி இருந்தவர்களோ, மீனுக்கு என்ன விலை எனத் தேடி நடந்தவர்களோ அல்ல அவர்கள். விண்மீன் மல்கிய விண்வெளியை நோக்கி, ‘மீட்பர் வரும் காலம் எக்காலம்?’ என எதிர்நோக்கி வாழ்ந்தவர்கள்! அதற்காக ஏங்கியவர்கள். ஆண்டவர் அவர்களின் ஏக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

பிலிப்பு, நத்தனியேல் ஆகிய இருவரும் இயேசுவின் வருகைக்காக ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள். எனவேதான் இயேசு அவர்களைக் கண்டதும் ‘என் பின்னே வாருங்கள்’ எனக் கூறித் தம்மோடு சேர்த்துக் கொண்டார். இயேசு நத்தனியேலைப் பார்த்தபோது, ‘உன்னை நான் அத்திமரத்தடியில் கண்டேன்’ என்கிறார். அங்கே அவர் வாளாவிருக்கவில்லை. இயேசுவின் வருகையைக் குறித்து தியானம் செய்து கொண்டிருந்தார்.

சமாரியப் பெண் இயேசுவிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” (யோவா. 4:25) என்கிறாள். அவளுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த இயேசு “உன்னோடு பேசும் நானே அவர்” என்றார்.

மனமாற்றமடைந்தவர் செய்தது என்ன?

தம்மைக் காத்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்திருந்த சக்கேயுவிடம் ஆண்டவர், ‘சக்கேயு விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத சக்கேயு விரைவாக இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். அன்றுவரை தாம் செய்திருந்த தீமைகளை அன்றோடு விட்டுவிடத் தீர்மானித்தார்.

அதன்பின் இயேசுவோடு வழிநடப்பதற்கான தகுதி சக்கேயுவுக்கு வாய்த்தது. இயேசுவைத் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று விருந்தோம்பல் செய்தார். ஒரு பெரிய பணப்பெட்டியை அவரது காலடியில் கொண்டுவந்து வைத்தார். பிறகு அவரிடம், ‘இவையெல்லாம் நான் அநியாயமாய் ஈட்டியவை. இவற்றை இனி நான் வைத்திருக்க மாட்டேன். என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். மீதியை யாரிடம் கவர்ந்தேனோ அவர்களுக்கு நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். பிறகு வந்து நான் உம்மைப் பின்பற்றுகிறேன்’ என்றார். அங்ஙனம் சக்கேயு இயேசுவின் நண்பன் ஆனார்.

இயேசு மீண்டும் எரிக்கோவினூடே நடந்து போனார். அப்போதும் மக்கள் அவருக்கு ஓசானா பாடினர். தங்களுடைய வீட்டிலும் அவர் வரவேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் இயேசுவோ நேராகச் சென்றது சக்கேயுவின் வீட்டிற்கு. மக்கள் அப்போதும் சக்கேயுவை நம்பவில்லை. அவர் மனம் மாறித் திருந்திய பின்னும் அவரைப் பாவியும் வரிதண்டுபவருமாகவே மக்கள் பார்த்தனர். அவர்களின் வீடுகளில் சக்கேயுவை அவர்கள் வரவேற்கவில்லை. எனவே, தமது நண்பனுக்கு இடமில்லாத இடத்தில் இயேசுவும் செல்ல விரும்பவில்லை.

இன்று இயேசு பலரிடமும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘இறங்கி வாருங்கள்’. உங்கள் மேட்டிமைகளை விட்டுவிட்டுக் கீழிறங்கி வாருங்கள். இயேசுவின் அழைப்பை நாம் செவிக்கொண்ட பின் தன்னலமாகிய பணப்பெட்டியை அப்படியே விட்டுவிட வேண்டும். நமது செல்வமாகிய அன்பை நான்கு மடங்காக நானிலத்தார்க்கு வழங்க வேண்டும். நம்முடைய நேரத்தைப் பயன்படுத்த சமூக அநீதிகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். மனமாற்றம் மட்டுமே போதுமானது அல்ல; அன்பர்களுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்.

Share:

Leela Philip

Leela Philip

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles