Trending Articles
1870 மேய் 16 பெந்தக்கோஸ்துத் திருநாளின் மாலைநேரம், ஐந்து மணி. கிறிஸ்தவர்களின் சகாயமான மாதாவின் பெயரில் டூரின் பட்டணத்தில் புனித டோண்போஸ்கோ ஓர் ஆலயத்தைக் கட்டியிருந்தார். அக்கோவிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் டோண்போஸ்கோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பனிரண்டு வயதான ஒரு சிறுமி தனது அண்ணியுடன் அவ்வாலயத்திற்குள் நுழைந்தாள். சிறுமியின் பெயர் மரியா. டோண்போஸ்கோ அங்கே வந்ததும் அவர் அச்சிறுமியைப் பற்றிக் கேட்டறிந்தார். அவள் பார்வையுடன்தான் பிறந்தாள். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கண்நோய் அவளது பார்வையைப் பறித்துவிட்டது. இவ்வாறு அவர்கள் அழுதுகொண்டே டோண்போஸ்கோவிடம் கூறினர்.
இரண்டு சுட்டிகளைக் காட்டிய டோண்போஸ்கோ ‘இவற்றுள் எது பெரிது எது சிறிது?’ என மரியாவைக் கேட்டார். அதற்கு அவள் என்னால் பார்க்க முடியவில்லையே என்றாள். அவர் மீண்டும் அவளை ஜன்னலோரம் கொண்டுபோய் ‘வெளிச்சம் தெரிகிறதா?’ எனக் கேட்டபோதும் அவள் இல்லை என்றாள்.
அவர் அவளிடம் நீ பார்க்க விரும்புகிறாயா? என வினவினார். அவள், ஆம். அதற்குத்தான் பெரிதும் விரும்புகிறேன் என்றாள். “நீ உன் கண்களால் பாவம் செய்யாமல் அவற்றை உனது ஆன்ம மீட்புக்காகப் பயன்படுத்துவாயா?” என அவர் அவளைக் கேட்க, அவளும் ‘நிச்சயம்’ என வாக்களித்தாள். அப்படியானால் உனது பார்வை திரும்பக் கிடைக்கும் என அப்புனிதர் வாக்குறுதி அளித்தார். அங்கிருந்தோரிடம் மாதாவின் மத்தியஸ்த சக்தியைக் குறித்துச் சிறிதுநேரம் உரையாற்றிய புனிதர், அருள் நிறைந்த மந்திரமும், கிருபை தயாபத்து மந்திரமும் ஒப்பித்தார். மாதாவின் பரிந்துரைகளை நம்பி அவ்வன்னையிடம் அடைக்கலமாகு என அவர் அவளுக்கு உபதேசித்தார். பிறகு கிறிஸ்தவர்களின் சகாயமாகிய மாதாவின் சுட்டியை உயர்த்திக்காட்டி கடவுளுடையவும் அன்னை மரியாவினுடையவும் மகிமைக்காக அதை என்னவென்று சொல் எனப் பணித்தார். ‘இதோ நான் பார்க்கிறேன்’ என மரியா முழங்கினாள். அவள் அச்சுட்டியைக் குறித்து விளக்கமாகக் கூறினாள். புனிதரிடமிருந்து அவள் அதை வாங்கிக் கொள்ள முற்படும்போது அது கீழே விழுந்து இருளில் தொலைந்தது. ஆனால் மரியா அதைத் தன் தீட்சண்யமான பார்வையால் தேடி எடுத்தாள். அங்கிருந்தவர்களின் மரிய பக்தி இன்னும் அதிகரித்தது.
மகிழ்ச்சியால் மதிமறந்த மரியா தன் வீட்டுக்கு ஓடினாள். அங்கிருந்த அண்ணி அவருக்கு நன்றி நவின்றாள். வீட்டிலிருந்து வந்த மரியா ஒரு சிறு பரிசைத் தந்து அப்புனிதருக்கு நன்றி கூறினாள். 1916 -ல் அதாவது 46 ஆண்டுகளுக்குப் பின் சில சலேசிய குருக்கள் மரிய ஸ்டார்டிடோ என்ற அந்தக்கால சிறுமியின் பார்வையைப் பரிசோதித்தனர். அவளுக்கு முழுப்பார்வை இருப்பதை உறுதி செய்தனர்.
சலேசியன் சபையை உருவாக்கிய டோண்போஸ்கோ இரு சிறுவர்களை உயிர்த்தெழச் செய்தார் என வரலாறு கூறுகிறது. ‘அசாத்தியமானது சாத்தியமாகிறது. மீமனிதமானவை மனிதமாகிறது’ என பதினோராம் பத்திநாதர் என்னும் பாப்பரசர் டோண்போஸ்கோவைக் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் என்பவரை உயிர்ப்பிக்கிறார்
டோண்போஸ்கோவின் விடுதியில் வசித்துவந்த சாள்ஸ் என்ற பதினைந்து வயதுச் சிறுவன் 1849 -ல் மரணப்படுக்கையில் கிடந்தான். அவன் டோண்போஸ்கோவை விளித்து முனகிய வண்ணம் கிடந்தான். அப்போது டோண்போஸ்கோ தொலை தூரங்களில் பயணித்துக் கொண்டிருந்தார். எனவே அவனது பெற்றோர் வேறொரு குருவானவரை வரவழைத்து அவனுக்குப் பாவ சங்கீர்த்தனம் அளித்தனர். இருப்பினும் அவன் டோண்போஸ்கோவை தொடர்ந்து அழைத்தவண்ணமிருந்தான். அவர் திரும்பி வருமுன்னே சிறுவன் உயிரிழந்தான்.
அவர் டூரினை அடைந்ததும் சிறுவனின் இறப்புச் செய்தியை அறிந்து அவனது வீட்டுக்குச் சென்றார். ‘பையனுக்கு எப்படி இருக்கிறது?’ என நலம் விசாரித்த அவரிடம் அவ்வீட்டு வேலையாள் ‘பையன் மரித்துப்போய் பதினோரு மணி நேரமாகிறது’ என்றார். ஆனால் டோண்போஸ்கோ அவரிடம் பையன் தூங்குகிறான் என்றார். அதற்கு அந்த வேலையாள், அவன் இறந்துவிட்டதை மருத்துவரும் உறுதிசெய்து ஒப்பளித்துள்ளதைச் சுட்டிக் காட்டினான். எனினும் அவர் அவன்மூலமாய் அழுதுகொண்டிருந்த பெற்றோரிடம் சென்றார்.
சாள்சின் பூதுடல் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அவன் பெற்றோரைத் தவிர மற்றவர்களை வெளியேற்றிக் கதவை மூடினார். சாள்சின் பூதுடல் வெண்ணிற ஆடையில் பொதியப்பட்டு முகமும் மூடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அடக்கம் செய்வதற்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்ட நிலையில் இருந்தது. டோண்போஸ்கோ சிறிது நேரம் அப்பூதுடல் அருகே நின்று ஜெபித்தார். பின்னர் ‘சாள்ஸ் எழுந்திரு’ என உரக்கக் கூறினார்.
போர்வைக்குள் கிடந்த பூதுடல் மெல்ல அசைந்தது. உடனே அவனது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினார். டோண்போஸ்கோ போர்வையைக் கிழித்து சிறுவனை மஞ்சத்திலிருந்து வெளியே தூக்கிவிட்டார். அப்போது சாள்ஸ் பெருமூச்சு விட்டான். அவன் அவனது தாயிடம் ‘ஏன் என்னைப் புது வெள்ளைத் துணியால் போர்த்தியிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டான். கேட்டதும் அருகிலே நின்ற புனிதரைக் கண்ணாரக் கண்டு கட்டிப்பிடித்தான்.
சாள்சின் மரணத்திற்குப் பின்னைய அனுபவங்கள்
சாள்ஸ் தனது மரணத்திற்குப் பின் நிகழ்ந்தவை பற்றி டோண்போஸ்கோவிடம் கூறினான். அவனது கடைசிப் பாவசங்கீர்த்தனத்தில் அவனால் எல்லாம் எடுத்துக்கூற முடியாமல் பயம் அவனைத் தடுத்தது. பேய்களின் ஒரு கும்பல் அவனை நரகத்தில் எறிவதற்காக ஓடி வந்தன. அப்போது அழகு பொருந்திய ஒரு பெண்மணி அங்கே ஓடிவந்தாள். அவள், “சாள்ஸ், உனக்கு இனியும் நம்பிக்கைக்கு இடமிருக்கிறது. நீ இதுவரைத் தீர்ப்புக்கு உள்ளாகவில்லை” எனக் கூறினாள். அப்போதுதான் ‘சாள்ஸ் எழுந்திரு’ என்ற குரல் கேட்டு எழுந்தேன். சாள்ஸ் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்பினான். அப்போது அவனது பெற்றோர் வெளியில் சென்று உட்கார்ந்தனர். பாவசங்கீர்த்தனம் முடிந்ததும் சாள்ஸ் உரத்த குரலில், ‘டோண்போஸ்கோ என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என முழங்கினான். அதைக் கேட்டதும் அனைவரும் உள்ளே ஓடிவந்தனர்.
சாள்ஸ் ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் வாய்ப்பினை அளித்த கடவுளுக்கு டோண்போஸ்கோ நன்றி கூறினார். ‘இப்போது சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா? இல்லை, பூமியிலேயே தொடர்கிறாயா?’ எனக் கேட்டார் புனிதர். அப்போது அவன் சுற்றும் கண்ணோடிக் கண்ணீர் மல்கச் சொன்னான்: ‘நான் சொர்க்கத்திற்குப் போகிறேன்’. இவ்வளவும் கூறியபின் சாள்ஸ் அமைதியுடன் இறந்தான்.
இந்த நிகழ்ச்சியை டோண்போஸ்கோ பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அங்கெல்லாம் ஒரு குருவானவரின் தலையீடு நிமித்தமாகவே அந்த சிறுவன் உயிர்த்தான் என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் 1882 -ல் அந்த குருவானவர் நானே என வெளிப்படையாகக் கூறினார்.
1866 -ல் புனித டோண்போஸ்கோ பிளாரன்ஸ் நகரில் இருந்தார். அப்போது அங்கும் ஒரு சிறுவன் இறந்தான். உடனே டோண்போஸ்கோ பிற குருக்களுடன் சேர்ந்து அந்தப் பையனுக்காக ஜெபித்தார். சிறிது நேரத்தில் அப்பையன் உயிர்த்தெழுந்தான்.
பேதுருவின் ஊரில் நடந்த அற்புதங்கள்
சலேஷியன் சபைக்கு வத்திக்கானின் இசைவு வேண்டி புனித டோண்போஸ்கோ ரோமைக்குச் சென்றார். அப்போது பலரது உடல்நலத்திற்கு இவர் காரணமானார். வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கிடந்த மோண்சிஞ்ஞோர் சுவக்கிலியாத்தியை புனிதர் தமது பிரசன்னத்தால் சவுக்கியமாக்கினார். மேலும் திமிர்வாதத்தால் வதங்கிப்போய் அசையவே முடியாமல் தவித்த கர்தினாள் அந்தோநெல்லி தாம் சந்தித்த மறுநாளில் நலமானார். கர்தினாள் பெரார்தியின் சகோதரி மகன் கபவாதக் காய்ச்சலால் மரணப்படுக்கையில் கிடந்தான். அவனையும் குணமாக்கினார்.
ஜெபத்திலோ கன்னிமரியாவிலோ எனக்கு நம்பிக்கை இல்லை
ஒருமுறை பிரசித்தி பெற்ற மருத்துவர் ஒருவர் டோண்போஸ்கோவைக் காணச் சென்றார். ‘எந்த வகையான நோயையும் நீங்கள் குணமாக்குவதாக மக்கள் சொல்கின்றனர். இது சரியா?’ என அம்மருத்துவர் வினவினார். கண்டிப்பாக இல்லை என மறுத்தார் டோண்போஸ்கோ. நீங்கள் நலமாக்கியவர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் இருக்கிறதே என்றார் மருத்துவர்.
“அன்னை மாதாவின் பரிந்துரை நாடி பலரும் இங்கே வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கிறதென்றால் அதற்கு அன்னை மரியாவே காரணம்” எனப் பணிவுடன் பகர்ந்தார் புனிதர்.
“அப்படியானால் அவள் என்னையும் நலமாக்கட்டும். அங்ஙனம் நானும் இந்த அற்புதங்களை நம்புமாறாகட்டும்”.
உங்களின் நோய் என்ன?
“வலிப்பு நோய். இது அவ்வப்போது உண்டாகி என்னைப் பாடாய்ப் படுத்துகிறதே. வெளியே சஞ்சரிக்க முடியவில்லை. மருந்துகளால் பயன் இல்லை” என்றார் மருத்துவர்.
இங்கே வருபவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நீங்களும் செய்யுங்கள். அன்னை மரியா உங்களைக் குணமாக்க வேண்டுமென்றால் நீங்கள் மண்டியிட்டு ஜெபியுங்கள். நானும் மண்டியிடுகிறேன். பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை போன்றவற்றின் மூலம் உங்கள் ஆன்மாவைக் கழுவித் தூய்மையாக்குங்கள் என்றார் டோண்போஸ்கோ.
“வேறேதும் உபாயம் இருந்தால் சொல்லுங்கள். இப்போது சொன்னவை எதுவும் என்னால் செய்ய முடியாது” – மருத்துவர்.
ஏன்?
நான் ஒரு அறிவியல்வாதி. கடவுள், கன்னிமரியா, அற்புதங்கள், பிரார்த்தனைகள் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை, மருத்துவர் மனம் திறந்தார். சற்றுநேரம் இருவரும் மௌனமாய் இருந்தனர். “நீங்கள் முழு நாத்திகர் அல்ல. நலம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இந்த இடம் தேடி வந்திருக்கிறீர்களே” டோண்போஸ்கோ சிரித்துக்கொண்டே மண்டியிட்டு சிலுவை அடையாளம் வரைந்தார். யாரும் வற்புறுத்தாமல் மருத்துவரும் மண்டியிட்டு சிலுவை வரைந்தார். சிறிது நேரத்தில் யாரும் சொல்லாமலேயே மருத்துவர் பாவசங்கீர்த்தனம் செய்தார்.
பாவசங்கீர்த்தனம் செய்தவுடன் ஒருபோதும் பெறாத பேரானந்தத்துடன் மருத்துவர் காணப்பட்டார். ஆன்மீக சவுக்கியம் கிடைத்ததும் வலிப்பு நோய் காணாமற் போயிருந்தது.
(சோஃபியா புக்ஸ் வெளியிட்ட ‘இறந்தோரை எழுப்பியவர்கள்’ என்ற நூலில் இருந்து).
Ancimol Joseph
Want to be in the loop?
Get the latest updates from Tidings!