Home/என்கவுண்டர்/Article

மார்ச் 04, 2020 2241 0 Shalom Tidings
என்கவுண்டர்

அவர்களுக்கானது எனக்குக் கிடைத்தது

காலையில் மருத்துவமனைப் பணிவிடைகளுக்குச் சென்றிருந்தேன். நேரம் பிந்தியதால் ஏற்கெனவே எல்லாப் பணிவிடைகளும் முடிந்திருந்தன. அப்போதுதான் 85 வயதுள்ள ஒரு பெரியவர் என்னிடம், “மக்களே, கழிவறைக்குப் போகணுமே” என்றார்.

குளிப்பாட்டி, நல்ல உடையும் உடுத்தி உட்கார வைத்திருந்தார்கள். நான் அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக் கழிவறையை நோக்கி நடந்தேன். அப்போது பக்கத்தில் கிடந்தவர்கள் சொன்னார்கள்: “நாலஞ்சு பசங்க இருக்காங்க; நேத்து ராத்திரி கொண்டாந்து உட்டிட்டு போயிட்டானுக.”

ஏழைகளின் தர்ம வார்டில், அதுவும் கட்டில் பற்றாக்குறையால் வெறும் வராந்தாவில்தான் அம்முதியவர் படுத்திருந்தார். எனது உதவியைப் பெற்றபின் அவர் என்னிடம், “மக்களே, உன் பேரென்ன? மனைவி மக்கள் உண்டா?”

நான் பதில் கொடுத்தேன். அப்பாயில் உட்கார்ந்திருந்த முதியவர் என்னை ஆசீர்வதித்துக் கூறினார்: “உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என் கண்கள் பனித்தன; தொண்டையில் ஏதோ உருண்டன.

என் கடவுளே, பாவியாகிய என்னிடம் நீர் இத்துணைக் கருணையாய் இருக்கிறீரே. அந்த முதியவரின் மக்களுக்கோ மருமக்களுக்கோ கிடைத்திருக்க வேண்டிய ஆசியல்லவா இது! கடவுளிடமிருந்து வரும் அப்பாவின் ‘ஆசியை’ மக்கள் புறக்கணித்தமையால் அது பிறருக்குச் செல்கிறது என்ற உண்மையை இம்மக்கள் அறியாமல் இருக்கிறார்களே. பெற்றோரின் முதுமையில் செய்யப்பட வேண்டிய பணிவிடைகளைச் சிலர் பாரமாகவும் பாழ்வேலையாகவுமே கருதுகின்றனர். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோரின் ஆசியை இழந்து விடுவதைப் பலரும் அறியாது இருக்கின்றனர். “உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி,உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” (வி.ப. 20 : 12).

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles