Trending Articles
மனித வெடிகுண்டுகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவை முன்னிட்டு மனித வெடிகுண்டுகளாய் மாறிய மனிதர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தங்கள் உடல்கள் கிழித்து வீசப்படும் என்று உறுதியான பிறகும் ஜப்பான் தேசத்திற்கு வீர விஜயம் செய்த மிஷனறிகளை இப்படியல்லாமல் எப்படி அழைப்பது? இங்கே ஒரே ஒரு வேறுபாடு இருக்கிறது. தங்கள் உடல்கள் கிழிகிழியென்று கிழிக்கப்பட்ட போதும், தங்களதும் மற்றனேகரதும் ஆன்மாக்களைக் கிறிஸ்துவுக்காக இவர்கள் ஆதாயமாக்கினர்.
மிகவும் கீழ்த்தரமான தண்டனைகளையே பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பான் பின்பற்றி வந்தது. உயிருடன் எரியூட்டுவதே அன்றைய மிஷனறிமார்களுக்கு சர்வசாதாரணமாக அளிக்கப்பட்ட தண்டனை. இதைக் கண்ணெதிரே கண்டும் தந்தை சாள்ஸ் ஸ்பினோளா சற்றும் பின்வாங்கவில்லை.
ஜப்பான் சிறைச் சாலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த போது அவர் தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “கிறிஸ்துவை முன்னிட்டுத் துன்புறுதல் எவ்வளவோ இனியது. அதனுடைய இனிமையை நான் எப்படி வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியும்? ஆனால் மரணம் நெருங்க நெருங்க என் ஆனந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்வரும் உயிர்ப்புத் திருவிழாவை விண்ணில் உள்ள புனிதர்களுடன் கொண்டாட முடியும் எனக் கருதுகிறேன்…”
மேலும் தம் உறவினர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில், “தமக்குப் பணிவிடை செய்யும் ஆன்மாக்களைக் கடவுள் தயாரிப்பதன் சுவையை நீ அறிய நேர்ந்திருந்தால் நீ உலகின் எல்லா சுகசொகுசுகளையும் துச்சமாகக் கருதியிருப்பாய். இப்போது நான் இயேசுவின் உண்மையான சீடனாக மாறிவிட்டேன். அவர்மீது கொண்ட அன்பினால் இப்போது சிறையிலிடப்பட்டிருக்கிறேன். இங்கே துன்பங்கள் மிகுதி. கடந்த நூறு நாட்களாகவே நான் மர்மக் காய்ச்சலுக்கு இரையாகியிருக்கிறேன். இப்போது என் உள்ளம் குதூகலமாய் இருக்கிறது. இது என் நெஞ்சத்தால் ஜீரணிக்க முடியாத வகை அதிபயங்கரமான ஆனந்தமாய் இருக்கிறது. இத்தகைய பேரானந்தத்தை நான் இதற்கு முன் அனுபவிக்கவே இல்லை.
1564 -ல் ஸ்பெயின் தேசத்தில் உள்ள மாட்ரிடில் என்னும் ஊரில் சாள்ஸ் ஸ்பினோளோ பிறந்தார். உயர்குடிப் பிறப்பில் பிறந்த சாள்சின் மாமனார் நோளாவின் ஆயராக இருந்தார். 1594 -ல் இவர் இயேசு சபைக் குருவாக அபிஷேகம் பெற்றார். 1602 -ல் ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் நாட்டிலிருந்து மிஷனறிமார்களை வெளியேற்றும்வரை இவர் அங்கேயே இருந்தார். ஆனால் மீண்டும் நான்காண்டுகள் அங்கே தலைமறைவாக வாழ்ந்தார். 1618 -ல் இவரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்துச் சிறையில் அடைத்தனர். சிறை வாழ்க்கையின் நான்காண்டுகள் இவர் பட்ட ஆனந்தம் சொல்ல முடியாதது.
1622 செப்டம்பர் 10 -ஆம் நாள் 50 பேர் அடங்கிய சங்கம் இரத்தசாட்சி மகுடம் சூடியது. தந்தை சாள்ஸ் ஸ்பினோளா உள்ளிட்ட 25 பேரை உயிருடன் எரித்தனர். ஏனையோர் கழுத்தறுக்கப்பட்டு உயிர் நீத்தனர். 1867 -ல் தந்தை சாள்ஸ் ஸ்பினோளாவை அருளாளர் பதவிக்குத் திருச்சபை உயர்த்தியது.
Ranjith Lawrence
Want to be in the loop?
Get the latest updates from Tidings!