Home/மகிழுங்கள்/Article
Trending Articles
அபிஷேக் தொலை தூரங்களை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தான். அப்போது ஆனந்த் அண்ணன் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான். அபிஷேக் கலக்கமாய் இருப்பதைக் கண்ட ஆனந்த் அபிஷேகிடம் ஏன் இப்படி வாளா உட்கார்ந்திருக்கிறாய்? எனக் கேட்டான். அப்போது அபிஷேக் மனம் திறந்தான்.
நாங்கள் புதுவீடு கட்டத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்தன. நான் நான்காம் வகுப்பில் படிக்கும்போது தொடங்கிய வீட்டுவேலை இப்போது எட்டாம் வகுப்பான போதும் முடியவில்லையே. அப்பாவுக்கு எப்போதாவதுதான் வேலை கிடைக்கும். அம்மாவுக்கும் அப்படித்தான். பிறகு எப்படி வீடுகட்டுவதற்கான காசு சேரும்? வீட்டுக்குக் கூரை உண்டு. அவ்வளவுதான். மற்றபடி எந்த அழகும் இல்லை. இந்த வீட்டை நினைத்தால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
ஆனந்த் ஒரு நிமிடம் மௌனமாய் நின்றான். பிறகு, அபிஷேகிடம் “நீ ஜெபிப்பது இல்லையா?” எனக் கேட்டான்.
“ஆம் அண்ணா. நான் தினமும் கடவுளிடம் ஜெபிக்கிறேன்” அபிஷேகின் பதில்.
ஆனால் ஒன்று சொல்லட்டுமா? கடவுள் இயேசுவில் மனிதராக வந்தபோது ஒரு மாட்டுத் தொழுவில் தான் பிறந்தார். ஆதலால் அந்த இயேசு உன் கஷ்டங்களை அறிவார். மட்டுமல்லாமல் வீட்டின் உயரத்தில் அல்ல; வீட்டிலுள்ளவர்களின் உயரம்தான் பெரிதெனக் கடவுள் நமக்குக் கற்றுத் தருவார். அப்போது உனது கவலைகள் அனைத்தும் நீங்கும்.
ஏதோ ஒரு புதிய ஞானம் பிறந்தது போல் அபிஷேக் ஆனந்த் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். தன்னம்பிக்கையோடு அவன் ஆனந்த் அண்ணனை நோக்கிப் புன்னகைத்தான். அப்போது ஆனந்த் இவ்வருடக் கிறிஸ்துமஸ் பரிசாக ஏழை ஒருவருக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற பங்குத்தந்தையின் வேண்டுகோளை நினைவு கூர்ந்தான். பங்குத் தந்தையிடம் அபிஷேகின் நிலைமையை எடுத்துக் கூறி அதை அபிஷேகிற்கே வழங்குவது எனத் தீர்மானித்தான்.
அப்போது ஆனந்தை நோக்கிப் புன்னகைத்த அபிஷேகின் கண்களில் விண்மீன்கள் பூத்தன. அதுவே தான் கட்டிய நட்சத்திரங்கள் என ஆனந்த் நினைத்துக் கொண்டான்.
Shalom Tidings
மனித வெடிகுண்டுகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவை முன்னிட்டு மனித வெடிகுண்டுகளாய் மாறிய மனிதர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தங்கள் உடல்கள் கிழித்து வீசப்படும் என்று உறுதியான பிறகும் ஜப்பான் தேசத்திற்கு வீர விஜயம் செய்த மிஷனறிகளை இப்படியல்லாமல் எப்படி அழைப்பது? இங்கே ஒரே ஒரு வேறுபாடு இருக்கிறது. தங்கள் உடல்கள் கிழிகிழியென்று கிழிக்கப்பட்ட போதும், தங்களதும் மற்றனேகரதும் ஆன்மாக்களைக் கிறிஸ்துவுக்காக இவர்கள் ஆதாயமாக்கினர். மிகவும் கீழ்த்தரமான தண்டனைகளையே பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பான் பின்பற்றி வந்தது. உயிருடன் எரியூட்டுவதே அன்றைய மிஷனறிமார்களுக்கு சர்வசாதாரணமாக அளிக்கப்பட்ட தண்டனை. இதைக் கண்ணெதிரே கண்டும் தந்தை சாள்ஸ் ஸ்பினோளா சற்றும் பின்வாங்கவில்லை. ஜப்பான் சிறைச் சாலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த போது அவர் தன் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: “கிறிஸ்துவை முன்னிட்டுத் துன்புறுதல் எவ்வளவோ இனியது. அதனுடைய இனிமையை நான் எப்படி வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியும்? ஆனால் மரணம் நெருங்க நெருங்க என் ஆனந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்வரும் உயிர்ப்புத் திருவிழாவை விண்ணில் உள்ள புனிதர்களுடன் கொண்டாட முடியும் எனக் கருதுகிறேன்...” மேலும் தம் உறவினர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில், “தமக்குப் பணிவிடை செய்யும் ஆன்மாக்களைக் கடவுள் தயாரிப்பதன் சுவையை நீ அறிய நேர்ந்திருந்தால் நீ உலகின் எல்லா சுகசொகுசுகளையும் துச்சமாகக் கருதியிருப்பாய். இப்போது நான் இயேசுவின் உண்மையான சீடனாக மாறிவிட்டேன். அவர்மீது கொண்ட அன்பினால் இப்போது சிறையிலிடப்பட்டிருக்கிறேன். இங்கே துன்பங்கள் மிகுதி. கடந்த நூறு நாட்களாகவே நான் மர்மக் காய்ச்சலுக்கு இரையாகியிருக்கிறேன். இப்போது என் உள்ளம் குதூகலமாய் இருக்கிறது. இது என் நெஞ்சத்தால் ஜீரணிக்க முடியாத வகை அதிபயங்கரமான ஆனந்தமாய் இருக்கிறது. இத்தகைய பேரானந்தத்தை நான் இதற்கு முன் அனுபவிக்கவே இல்லை. 1564 -ல் ஸ்பெயின் தேசத்தில் உள்ள மாட்ரிடில் என்னும் ஊரில் சாள்ஸ் ஸ்பினோளோ பிறந்தார். உயர்குடிப் பிறப்பில் பிறந்த சாள்சின் மாமனார் நோளாவின் ஆயராக இருந்தார். 1594 -ல் இவர் இயேசு சபைக் குருவாக அபிஷேகம் பெற்றார். 1602 -ல் ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் நாட்டிலிருந்து மிஷனறிமார்களை வெளியேற்றும்வரை இவர் அங்கேயே இருந்தார். ஆனால் மீண்டும் நான்காண்டுகள் அங்கே தலைமறைவாக வாழ்ந்தார். 1618 -ல் இவரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்துச் சிறையில் அடைத்தனர். சிறை வாழ்க்கையின் நான்காண்டுகள் இவர் பட்ட ஆனந்தம் சொல்ல முடியாதது. 1622 செப்டம்பர் 10 -ஆம் நாள் 50 பேர் அடங்கிய சங்கம் இரத்தசாட்சி மகுடம் சூடியது. தந்தை சாள்ஸ் ஸ்பினோளா உள்ளிட்ட 25 பேரை உயிருடன் எரித்தனர். ஏனையோர் கழுத்தறுக்கப்பட்டு உயிர் நீத்தனர். 1867 -ல் தந்தை சாள்ஸ் ஸ்பினோளாவை அருளாளர் பதவிக்குத் திருச்சபை உயர்த்தியது.
By: Ranjith Lawrence
Moreஅரண்களும் அழகும் வாய்ந்த செழிப்பான சிற்றூர்தான் நயீன் என்னும் ஊர். இயேசு அவ்வூரை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரோடு திரளான மக்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இயேசு தம் சீடர்களோடும் புதிதாகத் தம்மோடு சேர்ந்தவர்களோடும் பேசிக்கொண்டும் உலாவிக் கொண்டும் வழிநடந்தார். அவர்கள் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபொழுது இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். அவர்கள் தங்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பாடையில் கிடப்பவன் ஓர் இளைஞன். மணமலர்களும் வெள்ளாடைகளும் படுநேர்த்தியாக உள்ளனவே என்றான் யூதாஇஸ்காரியோத்து. சுவரின் மறுபக்கமாகச் சவ ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. பிணத்தின் அருகே ஒரு பெண்மணி விரிதலையோடு அழுத கோலத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகத்திரை தரித்திருந்தாள். பிணத்தைப் பிடித்திருந்தவர்களுள் ஒருவனின் கால் கல்லில் இடறியதால் பாடையில் கிடந்த பிணம் லேசாக அசைந்தது. அப்போது அத்தாய் அவனிடம் அழுதரற்றிக் கூறினாள்: “கூடாது கூடாது; கவனமாகப் போங்கள். என் மகன் அந்த அளவுக்குத் துன்பப்பட்டவன்”. அவள் தனது நடுங்கும் கையை உயர்த்தி பாடையின் மீது கிடந்த மகனை வருடினாள். பாடையின் பக்கத்தில் தொங்கிக் கிடந்த துகிலின் குஞ்சலத்தை முத்தமிட்டாள். மனமிரங்கிய பேதுருவின் கண்கள் குளமாகின. அவர் மெதுவாக ‘அவள் தான் அம்மா’ என மந்திரித்தார். பேதுருவின் கண்கள் மட்டுமல்ல; அந்திரேயு, யோவான் ஆகியோரது கண்களிலும் நீர் நிரம்பின. எப்போதும் அசராது நிற்கும் தோமாவின் கண்கள் கூடப் பனித்தன. அவர்களின் நெஞ்சம் தவித்தது. யூதாஸ் தனக்குத் தானே சொன்னான்: இறந்தவன் நானாக இருந்திருந்தால் என் தாய் எத்துணை வருந்தியிருப்பாள்! கருணைக் கடலாகிய இயேசு பாடையின் அருகிலே சென்றார். பிண ஊர்வலம் மயானத்தை நெருங்கியபோது அத்தாயின் ஓலம் விண்ணைப் பிளந்தது. இயேசு பாடையைத் தொட முயன்றார். உடனே இயேசுவின் கைகளை விலக்கிவிட்டு அந்த அம்மா சொன்னாள்: அவன் எனக்குரியவன்! “அம்மா அவன் உங்க பிள்ளைதான், தெரியும்”. ‘அவன் என் பிள்ளை! அவன் எனக்கு நல்லவன். இருந்தும் ஏன் அவன் இறந்தான்? நான் ஒரு கைம்பெண்’. அருகிருந்தவர்களின் ஒப்பாரி கதறலொலியாய்க் காற்றில் கலந்தது. அத்தாய் புலம்பிப் புலம்பி அழுதாள். அழுகையின் தீவிரத்தால் அவள் மூர்ச்சையுற்றாள். “அம்மா, அழாதீர்”. இயேசு தம் இடக்கையால் அவளை இறுகப் பிடித்தார். வலக்கையால் பாடையைத் தொட்ட இயேசு, அதைச் சுமந்து வருவோரிடம், பாடையைக் கீழே இறக்கி வையுங்கள் என்றார். அவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தனர். இயேசு, பாடையை மூடியிருந்த கட்டுகளை இழுத்தார். துணிகளை அகற்றினார். மூடாத மேனியுடன் பிணத்தைப் பார்த்த தாய், அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்; அரற்றினாள். இயேசு இப்போதும் அவளுடைய கையை இறுகப் பிடித்துள்ளார். அவரது கண்கள் தீட்சண்யமுள்ளனவும் ஒளிமின்னுவனவுமாய் உள்ளன. வலக்கையைத் தாழ்த்திய இயேசு சர்வ வல்லமையுடன் உரக்கக் கூறினார்: “இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”. இறந்தவன் அசைந்தான். அவன் கட்டுகளை அறுத்து எழுந்தான். அச்சம் மேலிடக் கதறினான்: அம்மா.... “தாயே இதோ உம் மகன். கடவுளின் பெயரால் இவனை நான் உனக்கு அளிக்கிறேன். அவன் வெளியே வர உதவி செய்யுங்கள்..!” இயேசு திரும்பி நடக்க விரும்பினார். ஆனால் மக்கள் கூட்டம் அவரை விடவில்லை. கட்டுகளை அறுத்து நீக்கி அவன் தன் அம்மாவைத் தழுவினான். அவள் தனது மேலாடையால் அவனைப் போர்த்தினாள். அவனை ஆரத்தழுவி முத்தமிட்டாள். இயேசு அவர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டார். அவரது கண்ணீரைக் கண்ட யூதாஸ், “போதகரே நீர் அழுவானேன்?” என வினவினார். இயேசு அவனிடம், “நான் என் அம்மாவை நினைத்துப் பார்த்தேன்” என்றார். இவ்வுரையாடல் அத்தாயின் உள்ளத்தை உசுப்பியது. அவள் தன் மகனுடன் மண்டியிட்டு, “என் மகனே இதோ இங்கு நிற்கும் இத்தூயவரை நீ புகழ்ந்து பாடு; உன் தாய்க்கு மீண்டும் உயிர் தந்தவர் இவரே” என்றாள். அவள் குனிந்து இயேசுவின் ஆடையினுடைய விளிம்பை முத்தமிட்டாள். மக்கள் இயேசுவுக்கும் கடவுளுக்கும் ஓசானா பாடினர். (இறை மனித அன்புக்கீதை: திருத்திய பதிப்பு).
By: Shalom Tidings
Moreஇயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்(லூக். 19:5). இது ஒரு தற்செயலான நிகழ்ச்சியென்று நினைக்கிறீர்களா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. சும்மா மரத்தில் ஏறி உட்கார்ந்திருந்த ஒருவனை இயேசுவும் சும்மா கூப்பிட்டார் என நினைக்காதீர்கள். லூக்கா நற்செய்தி 19 ஆம் அதிகாரம் 3 முதல் 9 வரையிலான பகுதியை வெகு பக்திசிரத்தையுடன் வாசித்தால்தான் உண்மை புலனாகும். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார். வரிதண்டுவோனாகிய மத்தேயுவை ஆண்டவர் அழைத்து அவரோடு கொண்டு நடப்பதை சக்கேயு அறிந்தார். அவரைப்போல் நானும் ஆக வேண்டும். இயேசுவைக் கண்ணாரக் காண வேண்டும் என உள்ளுக்குள் விரும்பினார் சக்கேயு. சக்கேயு குட்டையாய் இருந்ததால் இயேசுவைப் பார்க்க முடியவில்லை. அவர் முன்னே ஓடிப்போய் அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். வரிதண்டும் ஒரு தொழிலைச் செய்யக்கூடிய நபர் சும்மா போய் மரத்தில் ஏறி ஒளிந்திருப்பாரா? அவர் தமது போர்வையைக் கழற்றியாக வேண்டும். அதாவது தமது படாடோபங்களைத் துறக்க வேண்டும். அவர் உரோமைப் பேரரசின் உயரதிகாரி. இந்தப் பதவியையே அவர் துச்சமாய் மதித்துத் தூக்கியெறிய வேண்டும்! அதற்கப்புறம் தான் மரத்தில் ஏற முடியும். மனமறியும் ஆண்டவர் ஆண்டவர் நம் உள்ளங்களை அறிகிறார். அப்படித்தான் அவர் தம் சீடர்களை அழைத்தார். மாறாக, ஏதோ சில சீடர்கள் வேண்டுமே என நினைத்து கடற்கரையில் வலை கழுவிக்கொண்டிருந்தவர்களையும் அவர் ‘வாங்க, வாங்க’ என்று அழைக்கவில்லை. அவர்கள் யோவானைக் கவனித்தவர்களும் இயேசுவைக் காத்திருந்தவர்களும் ஆவர். இரவு நேரங்களில் கடலலைகளைக் கண்ணோக்கி இருந்தவர்களோ, மீனுக்கு என்ன விலை எனத் தேடி நடந்தவர்களோ அல்ல அவர்கள். விண்மீன் மல்கிய விண்வெளியை நோக்கி, ‘மீட்பர் வரும் காலம் எக்காலம்?’ என எதிர்நோக்கி வாழ்ந்தவர்கள்! அதற்காக ஏங்கியவர்கள். ஆண்டவர் அவர்களின் ஏக்கத்தை ஏற்றுக்கொண்டார். பிலிப்பு, நத்தனியேல் ஆகிய இருவரும் இயேசுவின் வருகைக்காக ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள். எனவேதான் இயேசு அவர்களைக் கண்டதும் ‘என் பின்னே வாருங்கள்’ எனக் கூறித் தம்மோடு சேர்த்துக் கொண்டார். இயேசு நத்தனியேலைப் பார்த்தபோது, ‘உன்னை நான் அத்திமரத்தடியில் கண்டேன்’ என்கிறார். அங்கே அவர் வாளாவிருக்கவில்லை. இயேசுவின் வருகையைக் குறித்து தியானம் செய்து கொண்டிருந்தார். சமாரியப் பெண் இயேசுவிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” (யோவா. 4:25) என்கிறாள். அவளுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த இயேசு “உன்னோடு பேசும் நானே அவர்” என்றார். மனமாற்றமடைந்தவர் செய்தது என்ன? தம்மைக் காத்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்திருந்த சக்கேயுவிடம் ஆண்டவர், ‘சக்கேயு விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத சக்கேயு விரைவாக இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். அன்றுவரை தாம் செய்திருந்த தீமைகளை அன்றோடு விட்டுவிடத் தீர்மானித்தார். அதன்பின் இயேசுவோடு வழிநடப்பதற்கான தகுதி சக்கேயுவுக்கு வாய்த்தது. இயேசுவைத் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று விருந்தோம்பல் செய்தார். ஒரு பெரிய பணப்பெட்டியை அவரது காலடியில் கொண்டுவந்து வைத்தார். பிறகு அவரிடம், ‘இவையெல்லாம் நான் அநியாயமாய் ஈட்டியவை. இவற்றை இனி நான் வைத்திருக்க மாட்டேன். என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். மீதியை யாரிடம் கவர்ந்தேனோ அவர்களுக்கு நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். பிறகு வந்து நான் உம்மைப் பின்பற்றுகிறேன்’ என்றார். அங்ஙனம் சக்கேயு இயேசுவின் நண்பன் ஆனார். இயேசு மீண்டும் எரிக்கோவினூடே நடந்து போனார். அப்போதும் மக்கள் அவருக்கு ஓசானா பாடினர். தங்களுடைய வீட்டிலும் அவர் வரவேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் இயேசுவோ நேராகச் சென்றது சக்கேயுவின் வீட்டிற்கு. மக்கள் அப்போதும் சக்கேயுவை நம்பவில்லை. அவர் மனம் மாறித் திருந்திய பின்னும் அவரைப் பாவியும் வரிதண்டுபவருமாகவே மக்கள் பார்த்தனர். அவர்களின் வீடுகளில் சக்கேயுவை அவர்கள் வரவேற்கவில்லை. எனவே, தமது நண்பனுக்கு இடமில்லாத இடத்தில் இயேசுவும் செல்ல விரும்பவில்லை. இன்று இயேசு பலரிடமும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘இறங்கி வாருங்கள்’. உங்கள் மேட்டிமைகளை விட்டுவிட்டுக் கீழிறங்கி வாருங்கள். இயேசுவின் அழைப்பை நாம் செவிக்கொண்ட பின் தன்னலமாகிய பணப்பெட்டியை அப்படியே விட்டுவிட வேண்டும். நமது செல்வமாகிய அன்பை நான்கு மடங்காக நானிலத்தார்க்கு வழங்க வேண்டும். நம்முடைய நேரத்தைப் பயன்படுத்த சமூக அநீதிகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். மனமாற்றம் மட்டுமே போதுமானது அல்ல; அன்பர்களுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்.
By: Leela Philip
Moreகாலையில் மருத்துவமனைப் பணிவிடைகளுக்குச் சென்றிருந்தேன். நேரம் பிந்தியதால் ஏற்கெனவே எல்லாப் பணிவிடைகளும் முடிந்திருந்தன. அப்போதுதான் 85 வயதுள்ள ஒரு பெரியவர் என்னிடம், “மக்களே, கழிவறைக்குப் போகணுமே” என்றார். குளிப்பாட்டி, நல்ல உடையும் உடுத்தி உட்கார வைத்திருந்தார்கள். நான் அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக் கழிவறையை நோக்கி நடந்தேன். அப்போது பக்கத்தில் கிடந்தவர்கள் சொன்னார்கள்: “நாலஞ்சு பசங்க இருக்காங்க; நேத்து ராத்திரி கொண்டாந்து உட்டிட்டு போயிட்டானுக.” ஏழைகளின் தர்ம வார்டில், அதுவும் கட்டில் பற்றாக்குறையால் வெறும் வராந்தாவில்தான் அம்முதியவர் படுத்திருந்தார். எனது உதவியைப் பெற்றபின் அவர் என்னிடம், “மக்களே, உன் பேரென்ன? மனைவி மக்கள் உண்டா?” நான் பதில் கொடுத்தேன். அப்பாயில் உட்கார்ந்திருந்த முதியவர் என்னை ஆசீர்வதித்துக் கூறினார்: “உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என் கண்கள் பனித்தன; தொண்டையில் ஏதோ உருண்டன. என் கடவுளே, பாவியாகிய என்னிடம் நீர் இத்துணைக் கருணையாய் இருக்கிறீரே. அந்த முதியவரின் மக்களுக்கோ மருமக்களுக்கோ கிடைத்திருக்க வேண்டிய ஆசியல்லவா இது! கடவுளிடமிருந்து வரும் அப்பாவின் ‘ஆசியை’ மக்கள் புறக்கணித்தமையால் அது பிறருக்குச் செல்கிறது என்ற உண்மையை இம்மக்கள் அறியாமல் இருக்கிறார்களே. பெற்றோரின் முதுமையில் செய்யப்பட வேண்டிய பணிவிடைகளைச் சிலர் பாரமாகவும் பாழ்வேலையாகவுமே கருதுகின்றனர். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோரின் ஆசியை இழந்து விடுவதைப் பலரும் அறியாது இருக்கின்றனர். “உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி,உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” (வி.ப. 20 : 12).
By: Shalom Tidings
More